கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமாரை, தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை என பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ’’தன்னை சஸ்பெண்ட் செய்ய நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரமில்லை’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடைமுறைகளின்போது, உடனடி உயர் அலுவலர் மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், தேர்தல் பணிகள் முடிந்துவிட்டதால் முத்துக்குமாரின் பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய பரிந்துரைக்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், முத்துக்குமாரின் பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக தாமதமின்றி திரும்பப் பெறுவதை உறுதிசெய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையடுத்து, தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக மட்டுமே இந்த பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதால், அதை முத்துக்குமாரின் பணி ஆவணங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ’ஸ்புட்னி வி’ தடுப்பூசி: ஆண்டுக்கு 85 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்தியா!