சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 10) திங்கட்கிழமை, சென்னைய விமான நிலையத்தில் இருந்து வருகை, புறப்பாடு விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, துபாய், கோலாலம்பூர், மஸ்கட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவுத்துள்ளனர்.
மேலும், விமான நேரங்களின் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன எனவும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகள், டயரை தெருக்களில் எரிக்க வேண்டாம் என்று விமான நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகத்திற்கு ஆறு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். போகிப் பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்கள், பிளாஸ்டிக், டயர் உள்ளிட்டவைகளை மக்கள் எரித்துக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகைஅயில், கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மக்கள், போகி பண்டிகையன்று அதிகளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் 73 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை விமான நிலையம் அதிகாரிகள் இணைந்து விழிப்புணர்வு நடத்தியுள்ளனர். இதன் விளைவாக அடுத்தடுத்து வந்த போகி பணிடிகைகளில், பெரும் அளவில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை பொதுமக்கள் எரிப்பதை குறைத்துள்ளனர்.
விழிப்புணர்வு :
இந்த நிலையில், நாளை போகி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சென்னை விமான நிலைய ஆணையம் (Chennai Airport Authority) இணைந்து பொதுமக்களிடம் பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட பொருட்களை எரிக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விமானங்களின் நேரங்கள் மாற்றம்:
இருப்பினும், சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை போகி பண்டிகையன்று அதிகாலை மற்றும் காலை நேரங்களில் சென்னைக்கு வரும் விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ஆகியவற்றின் நேரங்களை மாற்றியுள்ளனர்.
அதன்படி, ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் - சென்னை வரும் ஓமன் ஏர்லைன்ஸ், துபாயில் - சென்னை வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரில் - சென்னை வரும் ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஆகிய மூன்று விமான நிறுவனங்கள், அதிகாலை சென்னைக்கு வராமல் தாமதமாக சென்னைக்கு வந்துவிட்டு தாமதமாக சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை.. தி.நகரில் களைக்கட்டும் பர்ச்சேஸ்!
அதேபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், கத்தார் ஏர்வேஸ் விமானம், ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போன்றவைகளும், நாளை தங்களுடைய பயண நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டு இருப்பதாகவும், அது குறித்து விமான பயணிகளுக்கு முறையாக குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விமானங்கள் மட்டுமின்றி ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஜெட் உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், புகை மற்றும் பனிமூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக நாளை அதிகாலை மற்றும் காலை நேரங்களில் இயங்கக்கூடிய விமான சேவைகளின் பயணங்களை மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “இந்த ஆண்டு சென்னை விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள், போகி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து, விமான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் அதிகாலை சென்னை வருவதில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில விமானங்களின் நேரங்கள் மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும், நேர மாற்றப்படுவது குறித்து பயணிகளுக்கு உரிய குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளனர்.