கரூர்: கரூர் மாவட்டத்தில் 9 ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று (ஜீன் 13) இரவு நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டார். இக்கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், ”இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 9 ஆண்டு சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த அரசும் மேற்கொள்ளாத புதிய திட்டங்களை ஏற்படுத்தி இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அடுத்து வர உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்து, பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பார்” என தெரிவித்தார்.
இந்தி மொழி திணிப்பு: தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இந்தி மொழி திணிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக ஈடிவி செய்தியாளர் கேட்டதற்கு, ”தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை மாநில அரசு கடைபிடிக்கிறது. மத்தியில் மும்மொழி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழி நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்றுதான்” என கூறினார்.
பட்டமளிப்பு விழா தாமதம்: தமிழ்நாட்டில் பட்டமளிப்பு விழா தாமதமாவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”கரோனா காலகட்டத்திற்கு பிறகு பல பல்கலைக்கழகங்களில் இன்னும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. ஆளுநர்தான் பட்டம் அளிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அவர்களாகவே வழங்கி விடுகின்றனர். இதனால் மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படவில்லை.
ஆளுநரை குறை கூற வேண்டும் என சிலர் திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் பல மசோதாக்களை திருத்தங்களை செய்யக்கோரி திருப்பி அனுப்புகிறார். ஆனால், தமிழ்நாடு அரசு விரைவாக பதில் அளிக்காமல் அதனை திருத்தங்கள் மேற்கொண்டு திருப்பி அனுப்பாமல் மசோதாவை மாநில அரசே திரும்ப பெற்றுக் கொண்டது” என தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் குறித்து விமர்சனம்: பாஜக மாநில தலைவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு “அதிமுக - பாஜக கூட்டணி உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. ஆனால், இது போன்ற சில விமர்சனங்கள் துரதிஷ்டவசமானது. அதிமுக பாரதிய ஜனதா இனி இதை பேசி பெரிய பிரச்னையாக மாற்றி விடக்கூடாது.
பாஜக மாநிலத் தலைவரை விட தமிழ்நாடு பாஜகவில் அரசியல் தெரிந்தவர்கள் யாரும் இல்லை எனவும் அண்ணாமலை பேசியது சரியானது. இரு தரப்பிலும் கீழ் மட்டத் தலைவர்கள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அதிமுக - பாஜக சண்டையிட்டுக் கொள்வதால், நஷ்டம் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் என்று குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி விவகாரம்: செந்தில் பாலாஜி அலுவலகம் மற்றும் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, “தமிழ்நாட்டில் துணை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார்.
அப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, காங்கிரஸ் கட்சி அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி கூட்டணியில் அதிக இடங்கள் பெற்றனர் என ஸ்டாலின் இன்று ஒப்புக் கொள்வாரா? அப்படி அவர் ஒப்புக் கொண்டால் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி என பாரதிய ஜனதா கட்சியும் ஒப்புக் கொள்ளும். திமுகவுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா” என பதில் அளித்தார்.
மேலும் பேசிய அவர், “கரூரில் கடந்த வாரம் வருமானவ ரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது ரவுடிகளை வைத்து அதிகாரிகளை மிரட்டினார்கள். இப்போது, தைரியம் இருந்தால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்களை கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம். வருமான வரித்துறை சோதனையில் முக்கிய தொகுப்பு உள்ளதால்தான் அமலாக்கத்துறை தற்போது வந்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனை நடந்தால், அனைத்து சொத்துக்களும் வங்கி கணக்குகளும் முடக்கப்படும். மேலும் ,செந்தில் பாலாஜி சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ முடியாது. அதனை அமலாக்கத்துறை விரைவில் மேற்கொள்ளும் என்பதை எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க:மோடி-அமித்ஷாவால் இயக்கப்படும் விசாரணை அமைப்புக்கள்: ரா முத்தரசன் குற்றச்சாட்டு