அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. மீதமுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில், கா.பரமத்தி திமுக ஒன்றியப் பொறுப்பாளர் இளங்கோ களமிறக்கப்பட்டுள்ளார்.
1989ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மொஞ்சனூர் ராமசாமியின் மகனான இளங்கோ, தீவிர பரப்புரையில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று (மார்ச்.22) மாலை அரவக்குறிச்சி, பணப்பெட்டி புன்னம்சத்திரம் ஆகிய பகுதிகளில் திமுக எம்.பி கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், புன்னம்சத்திரத்தில் பரப்புரை மேற்கொண்டபோது அவ்வழியாக சுற்றித் திரிந்த பாஜகவினருடன், திமுகவினர் சிலர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாஜக மாவட்டத் தலைவர் சிவசாமி தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்த புகார் ஒன்றை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளார்.
இதனிடையே நேற்று இரவு 10 மணியளவில் அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஜக தொண்டர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அரவக்குறிச்சி தொகுதியில் பண அரசியல் மூலம் வெற்றி பெற்றவர்கள் தற்போது வன்முறை அரசியலை கையில் எடுத்துள்ளனர். புன்னம்சத்திரம் பகுதியில் பரப்புரையின்போது அவ்வழியாக பாஜக தேர்தல் பணிமனைக்கு சென்ற தொண்டர்கள் இருவரை திமுகவினர் தாக்கியுள்ளனர்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பகூட கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிக்கும்போது திமுகவினர் தாக்கியதில், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமாவில் வருவதுபோல வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும். இதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் கைக்கட்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள்.
திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இது ஆணவத்தின் உச்சம். இந்தத் தேர்தல் செந்தில் பாலாஜிக்கு கடைசி தேர்தலாக இருக்கும். பாஜக தொண்டர்கள் அகிம்சையைப் பின்பற்றுபவர்கள். எங்கள் பொறுமையை சோதித்து பார்க்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இதுவே கடைசி வன்முறையாக இருக்க வேண்டும். தொடர்ந்தால் இனி நடப்பதே வேறு” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ’திமுகவினரின் அட்டூழியம் இன்னும் 15 நாள்களுக்குதான்’ - அண்ணாமலை