கரூர்: மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரூர் மாற்றத்திற்கான மாநாடு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 1) நடைபெற்றது. கரூர் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை ஏற்றார்.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், 'கரூர் மாவட்டம் என்பது தமிழகத்தின் மையப் பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆன்மிகப் பெரியோர்கள் வாழ்ந்த இந்த மண்ணிற்கு தமிழகம் முழுவதும் பலரும் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அப்படி புகழ்பெற்ற தமிழகத்தின் மையப் பகுதியான, கரூரை சில அரசியல்வாதிகளால் தலைக்குனிவைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக 2015க்குப் பிறகு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் தமிழகத்தில் முதல்முறையாக வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன்பின் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரை, மக்களை பணத்திற்காக ஆடுகளை போல பட்டியில் அடைத்து வைத்து கரூர் மாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதற்கெல்லாம் ஒரே காரண கர்த்தா கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மட்டும்தான். இப்படிப்பட்ட நிலையை மாற்றத்தான் கரூர் மாற்றத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திமுக கைத்தடிகள் ஒரு வாரமாக பல்வேறு இடையூறுகளை செய்தனர். மாநாடு நடைபெறும் திருவள்ளுவர் மைதானத்திற்குள் பாஜக மேடை அமைக்கவிடாமல் இடையூறு செய்தனர். பொய் ரசீதுகளை வைத்துக்கொண்டு திமுக விளையாட்டுப் போட்டி மைதானத்தில் ஒரு மாதத்திற்கு நடப்பதாக இடையூறு செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆணை பெற்று தற்போது இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூஜா தூக்கும் வேலை: கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் திமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் இல்லாத குறையைப் போக்கும் வகையில், செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரையும் பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாங்கள் வெறும் கண்டனத்தோடு விட்டு விடப்போவதில்லை. அதிகாரிகள் எந்த இடத்திற்குச் சென்றாலும் கண்காணிப்போம். அனைத்தையும் குறித்து வைத்துள்ளோம்.
நிச்சயமாக இந்த அதிகாரிகள் எங்கும் தப்பித்துச்செல்ல முடியாது. தப்பித்துச் சென்றாள் விட்டுவிடும் பாஜக தலைவர்கள் இல்லை. அரசு அதிகாரிகள் நேர்மையாகவும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். அமைச்சருக்குப் பின்னால் கூஜா தூக்கும் வேலையை கரூர் எஸ்பி, கரூர் கலெக்டர் நிறுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்கு இன்னும் போய் சேராத நிலை உள்ளது. அதற்காக இந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியா வளர்ச்சியில் பாஜகவின் பங்களிப்புகள்: 9 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், விவசாயத்திற்குத் தேவையான உரங்களை சொந்த நாட்டிலே உற்பத்தி செய்வது என முடிவு செய்து, எட்டு புதிய உர உற்பத்தி நிறுவனங்கள் துவக்கப்பட்டன. இந்தியாவில் தற்போது 225 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது .2026ல் உரம் இறக்குமதி என்பது இந்தியாவில் இருக்காது என பாரத பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா 45 கிலோ உர மூட்டை விலை ரூ.2200. ஆனால், விவசாயிகளுக்கு விற்கப்படுவது ரூ.267 மட்டுமே. அரசு மானியமாக மூட்டை ஒன்றுக்கு ஒரு ஹெக்டர் விவசாய நிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் உர மானியத் தொகை 8,909 ரூபாய் அனைத்து விவசாயிகளுக்கும் அரசு வழங்குகிறது.
பல வகைகளில் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் மூன்றாவது முறையும் 2024ல் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் மோடி பிரதமராக வரவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
முதலமைச்சருக்கு எச்சரிக்கை: இதனால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்து தமிழகம் வந்தார், அதற்கு காரணம் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக முதலமைச்சர் பேசியது தான்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் அடுத்த கட்ட கூட்டத்தில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழக ஊடகங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், கர்நாடக காங்கிரஸ் துணை முதலமைச்சர் சிவக்குமார் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து இந்த ஆண்டு தண்ணீர் தர முடியாது. மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவுக்கு அரசியல் லாபத்திற்காக செல்லும் தமிழக முதலமைச்சர் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை பெற்று வர வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்திற்குள் நுழைய முடியாது' என்று தமிழக முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலுக்கு நான் ரெடி..! புது வாகனத்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி