கரூர்: தமிழ்நாடு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் ஒன்றியத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில மையம் இணைப்பு விழா கரூர் தான்தோன்றிமலையில் உள்ள கரூர் வாணிப செட்டியார் திருமண மண்டபத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வாசுகி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமாரி, சுகன்யா உஷாராணி முத்துக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத்தின் கரூர் மாவட்ட தலைவர் பாரதிதாசன், மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன், மத்திய செயற்குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். திருச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் வள்ளியம்மாள் நன்றி உரை கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு சமூகநலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியத்தின் கரூர் மாவட்ட தலைவர் பானுமதி, மாவட்ட செயலாளர் சாந்தி, மாவட்ட பொருளாளர் மாலதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநில பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்த காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகளிர் மகப்பேறு விடுப்பு வழங்குவதைப் போல அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், மாநில தலைவர் அமிர்தகுமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் பணிபுரிகின்ற அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக 20 ஆண்டுகளாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு 21 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனை அரசு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது; இதனையும் விரைவாக வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் மற்றும் எம்ஆர்பி செவிலியர் ஆகியோருக்கு காலம் முறை ஊதியம் இன்னும் நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது.
இதே போல நிரந்தரமாக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கை பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன. அரசு இதனை நிறைவேற்றினால் நிச்சயம் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறோம். அரசு காலதாமதப்படுத்தினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில குழு கூடி முடிவு செய்யும்" என தெரிவித்தார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை எவ்வளவு நாள்களாக நிலுவையில் உள்ளது என ஈடிவி செய்தியாளர் கேட்டதற்கு, "ஒவ்வொரு கோரிக்கைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு நிறைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அரசு நிலவியல் வைத்துள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: வரலாற்றை மாற்றுவதும், திரிப்பதுமான வேலைகள் நடக்கிறது: எழுத்தாளர் உதயசங்கர் வேதனை