கரூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக மக்களிடம் பலவிதமான வெறுப்பை சம்பாதித்துள்ளனர். குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் சேவை உரிய முறையில் சரியான நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதில்லை, நோயாளி உள்ளே இல்லாத நேரத்திலும் அலாரம், அபாய ஒலி எழுப்பி செல்வது, வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருப்பது, வாகனத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பது போன்ற செயல்கள் கரூரில் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கூட்டம் நடத்தி எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக GVK - EMRI என்ற தனியார் நிறுவன அலுவலர்கள் லாப நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கூறி 108 ஆம்புலன்ஸ் சேவை சரிவர இயங்கவில்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 7ஆம் தேதி காலை மேட்டு மகாதானத்தில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது அப்போது 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தபோது காலம் தாழ்த்தி வந்ததால் சம்பவ இடத்திலேயே விபத்துக்குள்ளான நபர் உயிரிழந்தார். மேலும் பொது மக்களின் உயிர்களை காக்கும் சேவையை லாப நோக்கத்திற்காக வாகனத்தை பராமரிக்காமல் அலட்சியமாக இருந்து பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்து வருகிறது என குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!