கரூர்: மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட தானேஸ் என்கிற முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டதால் தனது எட்டாவது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான 8ஆவது வார்டு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் கண்ணையன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 18,762 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மறைமுக தேர்தல்
இதனைத்தொடர்ந்து இன்று மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் மதியம் 2 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஊராட்சி மன்றத்தில் 8 அதிமுக உறுப்பினர்களும், 4 திமுக உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில் கூட்டம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தேர்தல் அலுவலரான மந்திராச்சலம் கூறிவிட்டு வாகனத்தில் வெளியேற முற்பட்டார்.
அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம்
அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், தேர்தல் அலுவலரும், மாவட்ட திட்ட இயக்குநருமான மந்திராச்சலம் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேர்தலை தள்ளி வைக்க அதற்கு என்ன காரணம் என கோரி அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தள்ளுமுள்ளு
பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்ய உத்தரவிட்டார். உடனடியாக முன்னாள் அமைச்சரை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டம் முழுவதிலும் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளது என்பதால், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நெருக்கடியை கொடுத்த பத்திரப்பதிவு!