கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
சரவணன் தனது பெற்றோருடன் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார். சரவணன் சாதி மறுப்பு திருமணம் செய்ததையடுத்து அவரது உறவினர்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சரவணன் குடியிருக்கும் வீட்டையும் அரசு அலுவலர்களின் துணையுடன் இடிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் சரவணன் புகார் மனு அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்த சரவணன், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் விரைந்து வந்து அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரை தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகள் தீக்குளிக்க முயற்சி