கோவிட் - 19 வைரஸ் தொற்று அச்சம் காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 159 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 142 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 41 பேர். மீதமுள்ளவர்கள் திண்டுக்கல், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த 95 வயது முதியவர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். கடந்த 5 நாள்களாக தீவிர சிகிச்சை, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாள்களாக முதியவரின் இதய துடிப்பு குறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு பேசும் திறன் குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா கூறுகையில், 95 வயது முதியவர் கடந்த 9ஆம் தேதி மருத்துவமனையில் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டார். தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் இதய பிரச்னை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று உயிரிழந்தார் எனக் கூறினார்.
மேலும், இவர் சமய மாநாட்டிற்கு சென்று வந்த திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞரின் தாத்தா என்பதும், அந்த இளைஞரும் தொற்று உறுதி செய்யப்பட்டு கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: திருவாரூரில் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ள 7 பேர்!