கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கொடையூர் ஊராட்சி அரசம்பாளையத்தில் உள்ள கந்தசாமி என்பவருக்கு சொந்தமான முருங்கை தோட்டத்தில் உள்ள மண் திட்டில் பாறை போன்று கல் புதைந்து இருந்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் சிலை, நந்தியுடன் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சிவனடியார்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அங்கு ஒன்று கூடினர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஒன்று திரண்டனர்.
மேலும் பொக்லின் இயந்திரம் மூலம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 5அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை பொருத்தும் பீடத்துடன் தோண்டி எடுத்தனர். உடனே தண்ணீர் ஊற்றி சிவலிங்கத்தை சுத்தப்படுத்தி பால், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் சிவ பக்தர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவலிங்கத்தை வணங்கிச் சென்றனர்.
இதனிடையே, நேற்று அக்டோபர் 28ஆம் தேதி தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிவலிங்கத்தை பார்வையிட்டு அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியருக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு!