கரூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் ஏற்படுத்தக்கூடிய கிராசிங் பகுதிகளாக அறியப்பட்டுள்ள நான்கு இடங்களில், 30 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''கரூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படக்கூடிய எட்டு இடங்களில் உயர் மட்டப் பாலம் வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், முன்னாள் எம்பி தம்பிதுரையும் நானும் நேரடியாகச் சென்று கோரிக்கை வைத்திருந்தோம்.
எட்டு இடங்களைப் பார்வையிட்ட உயர் அலுவலர்கள் பிளாக்ஸ்பார்ட் என அவற்றை அடையாளப்படுத்தினர். இதையடுத்து தவிட்டுப்பாளையம், செம்மடை, பெரிச்சிபாளையம், பெரியார் வளைவு ஆகிய நான்கு இடங்களில் தற்போது உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் மற்ற நான்கு இடங்களிலும் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக முக்கிய சாலைகளில் ரேடார் கண் பொறுத்தப்பட உள்ளது. இதற்காக, கடந்த பட்ஜெட் தொகையான 22 கோடி ரூபாய் நிதியிலிருந்து செங்கல்பட்டு முதல் திருச்சி வரை ரேடார் கண் பொருத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் 117 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 140 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வாகனங்களின் அதிவேகத்தையும், விதி மீறல்களையும் இயந்திரங்கள் மூலம் கண்டறிய கேமராக்களும் ரேடார்களும் வைக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையும், சேலம் முதல் கன்னியாகுமரி வரையும், சேலம் முதல் பாலக்காடு வரையும் உள்ள முக்கிய சாலையில் இந்தக் கருவி பொறுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாண்டிகோயிலில் நிகழ்ந்த கொடூர கொலை! குற்றவாளிகளை தேடுகிறது போலீஸ்!