கரூர்: சிவலிங்கபுரத்தில் உள்ள சுமார் நான்கு ஏக்கர் அளவிலான நிலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண் எடுத்து விட்டு அதனை சமன்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்றுள்ளனர்.
இதனால் அவ்வப்போது பெய்யும் மழையால் அந்த நிலமே குளம், குட்டையாக மாறிவிடும். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், வழக்கம்போல் அந்த நிலத்தில் நீர் தேங்கியுள்ளது.
ஆட்டைக் காப்பாற்ற முயன்று சிறுவர்கள் உயிரிழப்பு
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (11), மயில்வாகனம் (10), நவீன் குமார் (13) ஆகிய மூன்று சிறுவர்களும் ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர். இதில் நீர் அருந்த இறங்கிய சில ஆடுகள், நீரில் மூழ்கி தத்தளித்துள்ளது.
இதனைக் கண்ட சிறுவர்கள் மூன்று பேரும் ஆடுகளைக் காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தற்போது லாலாபேட்டை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மண் அள்ளி நிலத்தை சமன் செய்யாமல் விட்டுச் செல்வதால் ஏற்படும் பரிதாப மரணங்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி