கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த மே 26ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகளால் கரூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பூபதி மற்றும் லாரன்ஸ் உள்பட திமுகவைச் சேர்ந்த 15 நபர்கள் கடந்த மே 27ஆம் தேதி கரூர் நகர காவல் துறை மற்றும் தான்தோன்றிமலை காவல் துறையினரால் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் கரூர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு ஜூலை 28ஆம் தேதி 15 நபர்களின் ஜாமீனை ரத்து செய்து, இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அனைவரும் அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், ஜூலை 31ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான 15 நபர்களும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 15 நபர்களும் கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த வழக்கானது கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜலிங்கம் முன்னிலையிலான விசாரணையில் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டு 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த 15 நபர்கள் கரூர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜர்படுத்தபட்டனர்.
மேலும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 மற்றும் 2இல் ஆஜர்படுத்தப்பட்ட திமுகவினர் 15 பேருக்கும் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மீண்டும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் மூன்று முறை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சில முக்கிய குறிப்புகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றதால், அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் சோதனை நடத்தப்படலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை 5 நாட்கள் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவி நிர்மலா மற்றும் அவரது தாய் லட்சுமி ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் புகாரில் கைது செய்யப்பட்ட திமுகவினர் 15 பேர் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உயர் நீதிமன்றத்தை நாட திமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவ தேர்வு முடிவுகள் வெளியிட கோரி மாணவர் சங்கம் போராட்டம்!