கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்க்தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அதை அபகரிக்க தந்தையும், சகோதரரும் இணைந்து ஜோசப்பை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு, அண்ணனும் தந்தையும் கொலை செய்ய பல்வேறு வகைகளில் திட்டமிட்டு வருவதாகவும், தன்னை காப்பாற்றுங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜோசப் மனு அளித்தார். அப்போது, அவர் காவல் துறையினரின் காலில் விழுந்து அழுத காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 10) அவர் தனது வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோசப் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகவும், ஜோசப் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரது தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நேசமணி நகர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.