கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், கோவில்கள், வணிக வளாகங்கள் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குமரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடுகள் நடத்தி வந்தனர். தேவாலயங்களில் அதிக பொதுமக்கள் கூடியதால் கரோனா பீதி ஏற்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தின் 4 மறை மாவட்டங்களிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நாளைமுதல் வழிபாடுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நான்கு மறை மாவட்ட ஆயர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய 4 மறை மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரையில் வழிபாடுகள் நடைபெறாது எனக் கூறப்பட்டுள்ளது.