கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள மலையன் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி செல்லத்துரை (42). இவருக்கு மரிய சோபியா (39) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
செல்லத்துரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு கட்டட வேலைக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி செல்லத்துரை ரியாத்தில் மாரடைப்பால் மரணமடைந்ததாக வீட்டிற்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருமாறு, அவரது குடும்பத்தினரால் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டது. கரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதால், அவரது உடலைச் சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் தொழிலாளியின் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு இன்று (ஜூன் 18) மாலை கொண்டுவரப்பட்டு, பின்னர் சொந்த ஊருக்கு வரவழைத்து, நாளை காலை அடக்கம் செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபாடுவோம்' - ராகுல்