கரோனா வைரஸ் பரவாமலிருக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் சுகாதாரப் பணிகள், கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து, அரசுக்கும், மக்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டிவருகின்றனர்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள பெண்கள் அமைப்பினர், மகளிர் குழு மூலம் முகக்கவசம் தயார்செய்து வடசேரி காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கினார்கள்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மகளிர் குழுவின் தலைவி ஜான்சி கூறியதாவது:
குமரியில், தனியார் காய்கறிச் சந்தைகளில் முகக்கவசங்கள் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே வர வேண்டும் என எச்சரிக்கைப் பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அரசின் முயற்சிகளுக்கு தனியார் சந்தை நிர்வாகங்கள் ஒத்துழைப்புத் தந்துவருகின்றன.
நாகர்கோவிலில், மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்கறிச் சந்தைகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எனவே, மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சந்தைகளில் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காத்திருந்த விவசாயி... பொறுமையிழந்து விளைபொருட்களை சாலையில் கொட்டிய அவலம்!