கன்னியாகுமரி மாவட்டம் கோவில் விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மனைவி ரெஜிலாபாக்கியஜோதி (49). இவருக்கு கடந்த மாதம் காய்ச்சல் வந்துள்ளது. உடனடியாக, தெங்கம்புதூர் பகுதியிலுள்ள ரதீஷ் என்பவரின் (எஸ்.ஆர்.எம்.) மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு மருத்துவர் ரதீஷ் சுமார் 20 நாள்கள் ரெஜிலாபாக்கியஜோதிக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இதில், அளவிற்கு அதிகமாக மருந்து மற்றும் மாத்திரைகளை ரெஜிலாபாக்கியஜோதிக்கு கொடுத்ததால், அவரின் உடல்நிலை மோசமடைந்து கண்கள் இரண்டும் வீங்கியதுடன் பார்வையும் குறைய தொடங்கியுள்ளது. இதுகுறித்து பெண்ணின் கணவர் சிகிச்சை அளித்த ரதீஷிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பெண்ணை நாகர்கோவில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
அங்கு ரெஜிலாபாக்கியஜோதியை பரிசோதித்த மருத்துவர்கள், தவறான சிகிச்சை அளித்துள்ளதால் பார்வை பறிபோய் உள்ளது. உடனடியாக, அதிநவீன மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அப்பெண்ணிற்கு, பார்வை பறிபோய் வீங்கி இருந்த ஒரு கண், அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. தற்போது, மற்றொரு கண் பார்வையும் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ரெஜிலாபாக்கியஜோதியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாகவுள்ள ரதீஷை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.