கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர் தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களை சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொண்டு, காதலிப்பது போல் நடித்து ஏமாற்றியுள்ளார். மேலும், அவர்களோடு தனியாக இருக்கும் படங்கள், வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட ஐந்து பெண்கள் அளித்த புகாரின்பேரில். காசி மீது இதுவரை கந்துவட்டி, பாலியல் வன்புணர்வு, போக்சோ உள்ளிட்ட ஆறு வழக்குகள் பதிவாகியுள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்த காசியை, காவல் துறையினர் மீண்டும் விசாரணைக்காகக் காவலில் எடுத்தனர்.
இந்நிலையில், காசி வழக்கு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தக்கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் காசி வழக்கை எடுத்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்” என்று கூறினர்.
இதையும் படிங்க: 'என் மகன் தப்பு செய்யவில்லை; அவனை என்கவுன்டர் செய்ய முயற்சி செய்கிறார்கள்' - காசியின் தந்தை மனு