கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலத்தைச் சேர்ந்தவர்கள், நாகராஜன்(55) - ஜெயந்தி (49) தம்பதியினர். இவர்களுக்கு மதுகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக கொட்டாரம் தேவர் காம்பவுண்டிலுள்ள சங்கர் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
மதுகுமாருக்கு போதைப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. இதனால், அடிக்கடி மது குமார், மது குடித்துவிட்டு வந்து, தனது தந்தை நாகராஜனுடன் தகராறு செய்வது வழக்கம். இதேபோல் இன்று நண்பகல் மதுபோதையில் வந்து, தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். தகராறு கைகலப்பாக மாறுவதைக் கண்ட தாயார் ஜெயந்தி, அவர்களை சமரசம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மதுகுமார், அங்கே கிடந்த தேங்காய்த் துருவும் கத்தியை எடுத்து, ஜெயந்தியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ஜெயந்தி படுகாயமடைந்தார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மதுகுமாரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் சமரசம் செய்ய சென்ற தாயாரை மகன் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகன் கைவிட்டுச் சென்றதால் மூதாட்டி தற்கொலை முயற்சி!