குமரி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார்களை தெரியப்படுத்த ஏதுவாக 7010363173 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்டம் ஒழுங்கு, திருட்டு, பாலியல் குற்றங்கள், போதை பொருள்கள் விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 20 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றவாளிகள், சந்தேகப்படும்படியான நபர்கள், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் என 590 குற்றவாளிகள் மீது நன்னடத்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 நபர்களுக்கு நன்னடத்தை பிணை வழங்கப்பட்டு அவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிணையை மீறி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பிணைக்காலம் முடியும்வரை சிறையில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட 93 பேர் மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 32 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பெயரில் போலியாக மின்னஞ்சல் அனுப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் அடையாளம் கண்டு, அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.