கன்னியாகுமரி: போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகனத்தணிக்கை என்பது புதிய கட்டண விகிதத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோயில் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தலைக்கவசம்(ஹெல்மெட்) இருந்தும், அவர் தலையில் அணியாமல் தனது வாகனத்தின் மீது வைத்திருந்தார்.
இதைக்கண்ட போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் உணர்ச்சிவசப்பட்டு வேதனையை வெளிப்படுத்திய அந்த வாகனத்தில் வந்த முதியவர், 'தனக்கு நெஞ்சு வலி என்பதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுகொண்டிருந்தோம். அதற்காக வைத்திருந்த ஆயிரம் ரூபாயை காவல் துறையிடம் அபராதம் கட்டவேண்டியதா’ என வேதனைத்தெரிவித்தார்.
தனக்கு சிகிச்சைப்பெற வழியின்றி நெஞ்சு வலியோடு வீடு திரும்ப வேண்டிய துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தன்னிடம் தலைக்கவசம் இருந்தும் அபராதம் விதித்திருப்பது அநியாயம் எனவும் கூறி, அரை மணி நேரத்திற்கும் மேலாக வாகனத்தணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் புலம்பிக்கொண்டிருந்தார். எனினும், யாரும் கண்டு கொள்ளாத நிலையில் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
இதுகுறித்து அந்தப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அலுவலர் ஒருவர் கைவசம் தலைக்கவசம் இருந்தும்; தலையில் அவர் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்நிலையில் முதியவர் புலம்பும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்..!