கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார், அமமுக சார்பில் லெட்சுமணன், மநீம சார்பில் எபினேசர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயன்றீன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியின் வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் நடந்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
பாஜகவின் கோட்டையாக விளங்கும் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், ஆரம்பம் முதல் பின்னடைவை சந்தித்து வந்தார். இதனால், வசந்தகுமார் 6 லட்சத்து 2 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 50 ஆயிரத்து 288 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். வசந்தகுமார் 2 லட்சத்து 51 ஆயிரத்து 866 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீசுவரம் கிராமத்தில் பிறந்தவர் எச். வசந்தகுமார். தொடக்கத்தில் வீஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். பின்னர் மிகச் சிறிய ஒரு கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி, தற்போது வசந்த் அண்டு கோ எனும் முன்னணி வீட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையகத்தையும், வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ளார். இவர் தற்போது நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.