சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பேருந்து நிலையம், அப்பகுதியில் அமைந்திருக்கும் சாலைகள் எந்தவித அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக கிடப்பதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரிடம் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து வசந்தகுமார் எம்.பி. இன்று திடீரென கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் பேருந்து நிலைய மேலாளரை சந்தித்து குறைபாடுகள் குறித்து எடுத்துக் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழுதடைந்துள்ள கன்னியாகுமரி பேருந்து நிலைய சாலையை, மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் விரைவில் செய்துதருவேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நாளை நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்பி அலுவலகத்தில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். அவ்வாறு பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மத்திய நெடுஞ்சாலை அமைச்சரிடம் நேரில் கொடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் இணைய சேவைகள் விரைவில் தொடங்கும் - துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் நம்பிக்கை!