கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சோட்டாப்பணிக்கன் தேரிவிளையில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இந்தத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று (அக். 23) மாலை பெண்களுக்கான மாபெரும் புள்ளி வண்ண கோலப்பொடி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சாலையின் நடுவில் நின்று பெண்ள் கோலமிட்டதால் அந்தச் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கரும்பாட்டூரைச் சேர்ந்த நிஷாவிற்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற லீபுரத்தைச் சேர்ந்த பகீரதிக்கு 5,000 ரூபாயும் மூன்றாம் பரிசு பெற்ற சோட்டப்பணிக்கன் தேரிவிளை பகுதியைச் சேர்ந்த மணி செல்விக்கு ரூ. 3000 பரிசாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சோட்டப்பணிக்கன் தேரிவிளை ஊரைச் சேர்ந்த மேற்கு வங்க அரசின் பழங்குடியினர், வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் அர்ஜுன் ஐஏஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, கோலப்போட்டியை ஊர் தலைவர் சிவபெருமான் தொடக்கி வைத்தார். கோலப் போட்டிக்கு நடுவராக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெர்பச்சுவல் பா.ரொஸிட்டா செயல்பட்டார்.
நவராத்திரி விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கோலப்போட்டி வைக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.