சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து செல்கின்றனர்.
அப்படி வரும் சுற்றுலாப்பயணிகள் கடந்த சில வருடங்களாக தங்களிடமிருந்து செல்போன், பணம் மற்றும் உடைமைகளை சிலர் பறித்து செல்வதாக கன்னியாகுமரி காவல் துறையினரிடம் பல புகார்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி காந்தி மண்டபம் பகுதியில் கல்லுவிளையைச் சேர்ந்த சிம்சன் என்பவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சின்னமுட்டத்தைச் சேர்ந்த பரத் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாய் சாமுவேல் ஆகியோர் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.1000 கேட்டுள்ளனர். பின்னர் சிம்சோனிடமிருந்த 300 ரூபாயை பறித்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து சிம்சோன் கன்னியாகுமரி காவல் துறையினரிடம் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் பரத் மற்றும் ஜாய் சாமுவேல் ஆகியோரை பிடித்து விசாரணைசெய்தனர்.
விசாரணையில் இந்தப் பகுதியில் பல வருடங்களாக சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பணம் மற்றும் செல்போன்களை இந்த இருவரும் திருடி வந்தது தெரியவந்தது.
இதன்பேரில் இந்த இரண்டு பேர் மீதும் கன்னியாகுமரி காவல் துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.