கன்னியாகுமரி: அண்மை காலங்களில் திடீர் திடீரென மயங்கி விழுவதும், விழுந்தவர் உயிரிழக்கும் சம்பவங்கள் நாடெங்கிலும் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்படுவதாகவும், இது முழுக்க முழுக்க பாஸ்புட் உணவுகளின் தாக்கம் எனவும் கூறப்படுகிறது. நம் பாரம்பரிய உணவுகளை நாம் கைவிட்டதே இதற்கு காரணம்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கவும், பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்தின் தேவை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இதனை வலியுறுத்தும் விதமாக "எழுமின் அமைப்பு" மற்றும் "குமரி பசுமை சங்கம்" உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் இணைந்து "பசுமை திருவிழா"-வை நேற்று (மார்ச்.4) நடத்தினர்.
"குமரி பசுமை சங்கம்' என்ற தலைப்பில் நடந்த இந்த பசுமை திருவிழாவில் 80-க்கு மேற்பட்ட அரங்குகளில், குமரி மாவட்ட பாரம்பரிய வாழைப்பழங்கள், மாம்பலம் வகைகள், பலா போன்ற முக்கனிகளின் பல்வேறு ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், பாரம்பரிய உணவுகளை பார்வையாளர்கள் ரசிக்கவும் அதனை ருசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரோனா காலகட்டத்தில் ஆங்கில மருத்துவம் கைவிட்டபோது, கைகொடுத்த நாம் நாட்டின் மூலிகை மருந்துகள் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மூலிகை செடி கொடிகளையும் சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ முறைகளையும் உலகமயமாக்களை நோக்கி நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் பின்பற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், கடல் உணவு வகைகள் என பல்வேறு வகையான நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்க வழக்கத்தை குறித்து இந்த உணவு திருவிழாவில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இரண்டு நாள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு லட்டு, கம்பு நெய் லட்டு, ராகி கூழ், ராகி கேக், திணை பாயாசம், உளுந்தம் பால், கருப்பு கட்டி கொண்டு செய்யப்பட்ட பல்வேறு வகையான தின்பண்டங்கள், பால் கொழுக்கட்டை , சிறுதானிய வகைகள், பனை மரத்தில் இருந்து கிடைக்கும் உணவு வகைகளான பனங்கிழங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம் பழம் உட்பட 150-க்கு மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, குமரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்ககூடிய மட்டி பழம், சிவப்பு பழம், ஏத்தன் பழம், பேயன் பழம் உள்ளிட்ட 26 வகையிலான வாழை பழங்கள் இந்த உணவு திருவிழாவில் இடம் பெற்றிருந்தன.
இந்த பசுமை திருவிழாவையும் இதில் இடம்பெற்ற பாரம்பரிய உணவு பொருட்களையும் ஏராளமான மாணவியர்கள் கண்டு களித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வரலாற்று துறை பேராசிரியர் ஜலஜா குமாரி, "அண்மைக்காலமாக சாலைகளில் செல்பவர்களும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் திடீரென தரையில் சுரண்டு விழுவதுண்டு. அவ்வப்போது, ஒரு சிலர் ஒரே நிமிடத்தில், உயிரிழப்பதும் உண்டு. இத்தகைய உயிரிழப்புக்கு காரணம், 'ஹார்ட் அட்டாக்' என்ற இருதய நோய் என தெரிய வருகிறது.
இதற்கு காரணம், 'பாஸ்ட் புட்' உணவுகளே என மருத்துவ ஆராய்ச்சி பதிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. நவீன காலத்தில் பாஸ்ட் புட் உணவுகளுக்கு நாம் அடிமையாகி நம் பாரம்பரிய உணவுகளை மறந்ததன் விளைவாகவே தான், இவ்வாறு பல விதமான நோய் தாக்குதலுக்கு காரணம். எனவே, பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்துவிட்டு, பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொண்டு நமது உடல் நலனையும் சமுதாய நலனையும் பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய மாணவி செல்வி ஆன்றோ நிஷா, "இந்த கண்காட்சியில் ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவைகளைக் காணும்போது, நமது முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக நோய்களின்றி வாழ்ந்து இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி வரும் நிலையில், இங்கு ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்டவைகளில் இன்றியமையாத மூலிகைகள் கொண்டு சிகிச்சைகள் அளித்து வந்துள்ளனர் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல, பழ கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பாஸ்ட் புட் உணவுகளை உண்பதினால் தான் நமக்கு ஏராளமான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. முந்தைய காலகட்டத்தில் இயற்கையான உணவுகளை சாப்பிட்டதால் தான் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். எனவே, நாமும் அதனை மனதில் கொண்டு இயற்கை பாரம்பரியமான உணவுகளை சாப்பிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
பனை மரப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு பொருட்களான, அஞ்சறைப்பெட்டி, கிலுகிலுப்பை, முறம், அழகு சாதனப் பொருட்கள் திருவிழாவில் இடம்பெற்று இருந்தன. அதனைப் பலரும் வாங்கிச் சென்றனர். இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் வைக்கப்படும் உணவு பொருட்கள், வேதியியல் மாற்றத்தால் உடலுக்கு உபாதை அளிக்கும் பொருளாக மாற வாய்ப்புள்ள நிலையில், இத்தகைய பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் உணவுப்பொருட்கள் எத்தனை நாட்களானாலும், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதனால், இக்கண்காட்சியில் பனை ஓலை பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். பாரம்பரிய உணவு வகைகளும், குமரி மாவட்டத்தில் விளையும் முக்கனிகளின் பல்வேறு ரகங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒரு காலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என அரசு பொதுமக்களை கட்டாயப்படுத்தியது. இன்றைக்கு செயற்கை முறையில் கருத்தரிப்புக்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் மருத்துவமனையை நோக்கி அலையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம், பாரம்பரிய உணவுகளை நாம் மறந்தது தான். மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த உணவு பழக்கங்கள், இயற்கை உணவுகள், தானிய உணவு வகைகள், மூலிகைகள் வளர்ப்பில் லாபம் ஈட்டுவது எப்படி என்றும் விழாவில் விளக்கப்பட்டது. அதேபோல இந்த திருவிழாவில் சிலம்பம், தெக்கன் களரி, போன்ற வர்ம கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர், "திருவாரூரில் துவங்கி இந்த நிகழ்ச்சி சுவிட்சர்லாந்து நாடு வரை நமது பாரம்பரிய உணவு மற்றும் கலைகளைக் கொண்டு செல்ல 300 நாட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன் முதற்கட்டமாக, நாகர்கோவிலில் உள்ள புனித திருச்சிலுவை பெண்கள் கல்லூரியில் நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு.?