கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை மிகவும் புகழ் வாய்ந்தது. இங்கு மதுரை, திண்டுக்கல், பெங்களூரு, ஓசூர் மற்றும் உள்ளூர் பகுதிகளான ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், குமாரபுரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 20 டன்னுக்கு மேலாக பூக்கள் வரத்து இருக்கும். அதைப்போல் இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும்.
இந்நிலையில் மல்லிகை, பிச்சி பூக்கள் கடந்த ஒரு வாரமாக ஏற்றம் கண்டு நேற்று கிலோ ஒன்றுக்கு மல்லிகை 4 ஆயிரம் ரூபாயாகவும், பிச்சி 1500 ரூபாயாகவும் விலை உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் இன்று சுப தினங்கள் இல்லாத காரணத்தாலும், தொடர் மழை நின்றதால் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதாலும் தோவாளை மலர் சந்தையில் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை தடாலடியாக குறைந்தது.
இன்றைய நிலவரப்படி மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு 800 ரூபாயாகவும், பிச்சி 650 ரூபாயாகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுபோல் கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, தாமரை உள்ளிட்ட பூக்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிகை: உயர்ந்த பூக்கள் விலை!