கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக தொடர்ச்சியாக கன மழை பெய்தது வந்தது. இந்நிலையில், நேற்று(அக்.14) மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து, நாகர்கோவில், பூதப்பாண்டி, திட்டுவிளை, ஆரல்வாய்மொழி, தக்கலை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் மற்ற இடங்களில் கன மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மாம்பழத்தாறு அணை பகுதியில் 170 மில்லி மீட்டர் மழையும், ஆணைக்கிடங்கில் 167 மில்லி மீட்டர் மழையும், முள்ளங்கினாவிளை பகுதியில் 162 மில்லி மீட்டர் மழையும், களியல் பகுதியில் 160 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், குழித்துறை 151 மில்லி மீட்டர், கோழிபோர்விளை பகுதியில் 143 மில்லி மீட்டர், சிற்றாறு 1அணைப்பகுதியில் 128 மில்லி மீட்டர், சிற்றாறு 2 அணைப் பகுதியில் 118 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையினுடைய நீர் பிடிப்பு பகுதிகளான கோதையார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறி வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று (அக்.15) காலை நிலவரப்படி, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பறை அணையின் நீர்மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 276 கென்னடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 65.35 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 723 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 16.76 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1158 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வினாடிக்கு 537 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து, 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 16.86 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் வினாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கோதையாறு, தாமிரபரணி, பழையறு, பரளியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தொடர் கன மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது, இதனால், கோதையாற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திற்பரப்பு அருவியில் அதிக நீர்வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே, விடுமுறை நாளில் திறப்பரப்பு அருவிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பக்தர்கள் சென்ற டெம்போ விபத்து; 12 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!