உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தினமும் அதிகாலை 4. 30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் .
மீண்டும் மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனால் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறப்பு, நடை அடைப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.14 மணி முதல் நாளை அதிகாலை 4.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு 8.30 மணிக்கு கோயில் நடை அடைக்கும்போது பகவதி அம்மன் சிலை தர்பை புல் மற்றும் பட்டுப்புடவையால் மூடி வைக்கப்படும். அதேபோல் தியாக சவுந்தரி, பால சௌந்தரி,அம்மன் சிலைகள் ,இந்த காந்த விநாயகர், தர்மசாஸ்தா, சூரிய பகவான், நாகராஜன் ஆகிய சிலைகளும் தர்பை புல் மூலம் மூடி வைக்கப்படும். மறுநாள் அதிகாலையில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோயில் நடை 30 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும்.