கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணபதி புரம் கிராமத்தில் அன்ன விநாயகர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1996ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் சந்தித்து மகிழ்ந்தனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்தித்த தருணங்கள், அவர்களுக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் நண்பர்களைத் தொடர்புகொண்ட மாணவ மாணவிகள் அனைவரும் கடைசியாக படித்து பிரிந்து சென்ற அதே வகுப்பறையில் ஒன்று சேர வேண்டும் என திட்டமிட்டனர், அதன்படி இன்று அனைவரும் அவர்கள் படித்த பள்ளியில் சந்தித்தனர், அத்துடன் தங்களது ஆசிரியர்களையும் அழைத்து மலர்கள் கொடுத்து வரவேற்று அவர்கள் கெளரவப்படுத்தினர்.
இது தங்கள் வாழ்வில் மிகப்பெரிய அனுபவம் என தெரிவித்த மாணவ மாணவிகள், தங்கள் நண்பர்களையும் ஆசிரியர்களையும் மீண்டும் சந்திப்போமா என்பது கனவாகவே இருந்தது, அனால் கடல் கடந்து வந்து தங்களது பழைய நட்பை சந்தித்து குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்தி வைத்து மகிழ்ந்தோம். இந்த விழாவில் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆசிர்வதித்தது தங்களை மேலும் முன்னேற்றும் என தெரிவித்தனர். படித்ததோடு ஆசிரியர்களை மறந்துவிடும் மாணவர்கள் மத்தியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களிடம் வாழ்த்து பெற்ற மாணவ மாணவிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்ததுள்ளது.