கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடியில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஏழாம் ஆண்டு குரு பூர்ணிமா விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக காலையில் ஆரத்தியும் பவுர்ணமி சங்கல்ப யாகமும் நடைபெற்றது.
பின்னர் கூட்டுப்பிரார்த்தனையில் சாய்பாபாவின் மூல மந்திர சங்கீர்த்தனமும் ஆனந்த சாயி பஜன் குழுவினரின் பஜனை பாடல்களும் பாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரவு சாய்பாபாவிற்கு ஒன்பது விதமான வண்ண மலர்களால் மாபெரும் மலர் அபிஷேகமும் காலை, மதியம், இரவு நேரங்களில் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
இவ்வழிபாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய்சேரிட்டபுள் டிரஸ்ட், ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.