தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் அரசு ரப்பர் கழகம் இயங்கிவருகிறது. இங்கு நான்கு கோட்டங்களுக்கு உட்பட்ட ஒன்பது டிவிஷன்களில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் வெட்டும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
ரப்பர் தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக 100 ரூபாய் கூடுதலாக ஊதிய உயர்வு கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் அரசு அலுவலர்களுடனும் அமைச்சர்களுடனும் 46 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அரசு தரப்பில் 23 ரூபாய் இடைக்கால ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிப்பட்டு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்யப்படும் என்று அரசு அறிவித்ததால் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அரசு அறிவித்தபடி ஊதிய உயர்வு அறிவிக்கப்படாததால் கடைசி கட்டமாக பிப்ரவரி 15ஆம் தேதி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் முடிவு எட்டப்படாததால் அனைத்து தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுடன் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் போராட்டம் - பாதுகாப்பு ஏற்பாடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை