குமரி மாவட்டம் தக்கலையில் நெசவு தொழிலாளியாக வாழ்ந்து 14 நூல்களை எழுதிய சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள், தங்களது குடும்பத்தோடு பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் பிறந்த பீர் முகம்மது என்பவர், இஸ்லாமிய கோட்பாடுகள் மீதான பற்றால் ஆன்மீகப் பயணமாக குமரி மாவட்டம் வந்தார். பின்னர் இங்குள்ள தக்கலை பகுதியில் தங்கி நெசவு தொழிலில் ஈடுபட்டதோடு, தன் ஆழ்ந்த இலக்கிய அறிவால் ஞானப்புகழ்ச்சி, ஞானப்பூட்டு, ஞானப்பால், ஞானமணிமாலை என 14 நூல்களை எழுதி சூபி கவிஞர் என புகழ்பெற்றார்.
இவர், தக்கலையில் சமாதியான இடத்தில் தர்கா அமைத்து இஸ்லாமியர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நினைவு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அவரால் இயற்றப்பட்ட ஞானப்புகழ்ச்சி பாடல் ஊர்மக்களால் இரவில் தொடங்கி விடிய விடிய பாடப்படும்.
அந்தவகையில், இந்த ஆண்டு நினைவுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 9ஆம் தேதி இரவு நடைபெறும் ஞானப்புகழ்ச்சி பாடலுக்கு பின்னர் மறுநாள் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இன்றைய கொடியேற்ற விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்தோடு பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'படிக்கும் வயதில் திரைப்படங்கள் பார்த்து கெட்டுப்போகாதீர்கள்' - வேலூர் கலெக்டர்