கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல், இரவு நேரங்களில் வெளியூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் வந்துசென்றுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இங்கு பாலியல் தொழில் நடைபெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர், அந்த வீட்டைத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில், தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், அந்த வீட்டில் நேற்று (செப். 28) திடீரென புகுந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள இரண்டு தனித்தனி அறைகளில், சிறுமிகளுடன் இருந்த இரண்டு ஆண்கள், காவல் துறையினரைக் கண்டதும், அரை நிர்வாணத்துடன் அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களைச் சுற்றிவளைத்த காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஒருவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான குளச்சல் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் தக்கலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒரு பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், அந்தப் பெண் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லதா என்பதும் அவர் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்துவந்ததும் தெரியவந்தது. மேலும், தனது சொந்த மகள்களான கல்லூரி, 12ஆம், 10ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மகள்களையும், இளைய மகளின் பள்ளி தோழியான மற்றொரு சிறுமியையும் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து நான்கு சிறுமிகளையும் மீட்ட காவல் துறையினர், அவர்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இவர்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த தக்கலை காவல் துறையினர், பள்ளி செல்லும் பெற்ற பிள்ளைகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் லதா, பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன், கூலித் தொழிலாளி சுனில் ஆகியோரை கைதுசெய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், சிறுமிகளிடம் பாலியல் ரீதியிலான தொடர்பிலிருந்த பல ஆண்களின் பட்டியலையும் காவல் துறையினர் சேகரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் - இருவர் கைது!