கன்னியாகுமரி: தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. காவல் துறையின் அதிரடி நடவடிக்கையையும் மீறி கடத்தல் நடக்கிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளை குறி வைத்து இதன் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், கேரளா மாநிலம் தமிழ்நாடு, கேரளா எல்லை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் குட்கா கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு அருகில் துணிக்கடை நடத்தி வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (30) உடன் நட்பு ஏற்படுள்ளது.
ராஜஸ்தானிலிருந்து போதைப் பொருள் வாங்கித் தர கணேசன் ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் பிரகாஷ் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நண்பரை தொடர்பு கொண்டு, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ்(27) என்பவர் உதவியுடன் 300 கிராம் 'எம்டிஎம்ஏ' என்ற போதைப் பொருளை கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து கணேசனிடம் போதைப் பொருளை கொடுப்பதற்காக இருவரும் குழித்துறை வந்துள்ளனர். இது குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் பின் தொடர்ந்து, குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 300 கிராம் 'எம்டிஎம்ஏ' என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அதிபயங்கர போதைபொருளை கடத்திவந்ததாக பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க:இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஆயுத கடத்தல்