கன்னியாகுமரி: திருவள்ளுவர் புகழை பறைசாற்றும் வகையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே 2000-ம் ஆண்டில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டு சிலையின் மெருகு குலையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை இச்சிலை மீது பூசப்படும். இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், கரோனா தொற்றால் இப்பணி தடைபட்டது.
இந்நிலையில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்காகப் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ரூ.1 கோடி திட்ட மதிப்பில் டெண்டர் விடப்பட்டு ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி துவங்கியது. இப்பணி நவம்பர் 1-ம் தேதிக்குள் முடிந்து 2-ம் தேதி முதல் பொதுமக்கள் சிலையைப் பார்வையிட அனுமதிக்கத் திட்டமிடப்பட்டது.
ஆனால், கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று, மழை போன்றவற்றால் திட்டமிட்டவாறு பணிகளை முடிக்க முடியவில்லை. 140 அடி உயரம் வரை இரும்பு சாரம் அமைத்து சிலையில் உள்ள உப்பு படிவங்களை அகற்றுவதற்கான காகிதக்கூழ் ஒட்டும் பணி, சிலை இணைப்புகளை கருப்புக்கட்டி, சுண்ணாம்பு போன்ற கலவைகளால் பலப்படுத்தும் பணிகள் நடந்தன.
இந்நிலையில் தற்போது பராமரிப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சுமார் 85 டன் இரும்பு கம்பிகளால் 140 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சாரம் அகற்றும் பணிகள் துவங்கியுள்ளன. இருப்பினும் கடலில் காற்று அதிகமாக வீசுவதால் உயரத்தில் இருந்து கம்பிகள் இறக்குவதில் சிரமம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. எத்தாந்தண்டி! 100 கிலோ எடை கொண்ட வாழைத்தார்!