கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள வேளிமலை முருகன் கோயிலில் நேற்று(ஜூன் 11) வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான மக்கள் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுக்கக் கூடாது எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது. பிரச்னைக்குத் தீர்வுகாண எம்.ஆர். காந்தி உட்பட 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி கூறுகையில், 'இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயில் விழாக்களில் பங்கேற்க கூடாது என அந்த பகுதி ஊர் மக்களுடைய எதிர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவும் நேற்று(ஜூன் 11) களமிறங்கியது’ என கருத்து தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறைக்குச் சொந்தமான எல்லா கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் ஆலயத்தினுள் நுழையக் கூடாது என்ற போர்டு வைத்திருப்பதாகவும் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். காந்தி கூறினார். எனவே, இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் ஆலய விழாக்களில் வருவதை நாங்கள் எதிர்ப்போம்; எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், 'அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்போதும் கலக்கக்கூடாது. இரண்டும் வேறு வேறு. ஆன்மிகத்தை மத வெறியாக மாற்ற முயற்சி செய்யக்கூடாது. இந்த மாவட்டத்தில் அது நடைபெறாது. நடக்கவும் விடமாட்டோம்' எனப் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆளுநரின் சனாதான பேச்சுக்கு திமுக கடும் கண்டனம்!