கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், தனது மகள் மற்றும் மகனுடன் தனது தாயார் உதவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கணவர் இறந்தபிறகு ஏழ்மையில் வாடிய அவர், தனது மகனையும்,மகளையும் நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று எண்ணி சவுதியில் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி, தனது 17 வயது மகளை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வரும் அவர் கடந்த நான்காம் தேதி, கல்லூரியிலிருந்து வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மாணவியின் வீட்டருகே உள்ள இளம்பெண் மீது காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சுஜின் என்பவர் மாணவியை கடத்திச்சென்று நாகர்கோவில் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மாணவியுடன் குடும்பம் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் சுஜின் இருந்த வீட்டைச் சுற்றி வளைத்து, சுஜினை கைது செய்து மாணவியை மீட்டனர். இதன் பின்னர் நடத்திய விசாரணையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுஜின் பொறியாளர் வேலைப் பார்த்து வருவதாக, மாணவியிடம் பொய்களைக் கூறி அவரைக் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் என்பதும்; பின்னர் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
மேலும், கடந்த நான்காம் தேதி கல்லூரி சென்ற மாணவியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அருமனைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியிருக்கிறார் என்பதும் அறியப்படுகிறது.
இதனையடுத்து சுஜின் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!