நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயகிருஷ்ணன். இவரது மனைவி பாக்கியதேவி. இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பாக்கிய தேவி கருவுற்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி குழந்தை பேறுக்காக குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா சோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் மறுநாள் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையும் பிறந்தது.
பின்னர் பாக்கியதேவி திடீரென மயக்கநிலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தாய்க்கும்-குழந்தைக்கும் கரோனா இருப்பதாகச் சொல்லி ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சென்றபோது அரசு மருத்துவமனையில் பாக்கியதேவியை அங்கும், இங்குமாக சிகிச்சைக்காக அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது இதயத்துடிப்பு படிப்படியாக குறைந்து உயிர் இழந்தார். ஆனால் குழந்தை ஆரோக்கியத்துடன் எந்தப் பாதிப்பும் இன்றி உள்ளது.
தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை கொடுத்துவிட்டு இந்த உயிரிழப்பில் இருந்து தப்பிப்பதற்காக கரோனா இருப்பதாகக் கூறி தாயும் குழந்தையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
எனவே, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவமனையில் பாக்கியதேவியை அலைகழித்து அவரது உயிரிழப்பிற்கு காரணமான அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.