கன்னியாகுமரி: தோவாளை மலர்ச் சந்தை, தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சந்தைகளில் ஒன்று. குமரி மாவட்டம் மட்டும் இன்றி கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து தினமும் பல டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய பூ வர்த்தக சந்தையாக தோவாளை மலர்ச் சந்தை விளங்கி வருகிறது.
பண்டிகை காலங்கள், விசேஷ காலங்கள், திருமண நிகழ்வுகள் ஆகிய காலங்களில் பூக்களின் விலை இரண்டு, மூன்று மடங்கு என உயர்வது வழக்கம். அந்த வகையில் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவில்களிலும், வீடுகளிலும் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். எனவே, பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.
அதே வேளையில் ஓசூர், ராயக்கோட்டை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற பூக்கள் வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் இந்த தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ, இன்று 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
நேற்று ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ இன்று 2000 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதே போன்று நேற்று ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்ற ரோஜாப்பூ இன்று 300 ரூபாயாகவும், நேற்று கிலோ 200 ரூபாய்க்கு விற்ற செவ்வந்திப்பூ இன்று 400 ரூபாயாகவும், 130 ரூபாய்க்கு விற்ற அரளிப்பூ 250 ரூபாய் என இப்படி அனைத்து பூக்களுமே மூன்று மடங்கு விலை உயர்ந்து உள்ளது.
மேலும் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வந்து பூக்கள் வாங்கிச் செல்வதால் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும் பூக்களின் தேவை உள்ளதால்
தோவாளை பூச்சந்தையில் விற்பனை களைகட்டி உள்ளது.
இதையும் படிங்க: கடையத்தில் கனிமவள கொள்ளை.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவர்கள்!