கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செந்தில் குமார், தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்களுடன் நாகர்கோவிலில் உள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் வந்திருக்கிறார்.
ரயில் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்த போது, தன்னுடைய கைப்பையை காணாததால் துடித்த கிருஷ்ணவேணி கூச்சலிட்டு உள்ளார். இதனை அடுத்து நாகர்கோவில் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில் முழுக்க சோதனையிட்ட காவல் துறையினர், இச்சம்வம் குறித்து கிருஷ்ணவேனியிடம் புகாரைப் பெற்றனர்.
அதில், தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து கைப்பையில் 35 சவரன் நகைகள் கொண்டு வந்ததாகவும், மேலும் பணமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொண்டு வந்ததாகவும், அவை அனைத்தும் திருடு போயுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.