கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சபரிஹிரிஷன் (42). இவர் அதே பகுதியில் மருந்தகம் வைத்து நடத்திவருகிறார். இவர் மனைவி ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
இவர் பெற்றோரை கவனிப்பதற்காக குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (25) என்ற பெண்ணை பணி அமர்த்தியுள்ளார்கள். இந்நிலையில் இவர் வீட்டில் வைத்திருந்த 19 சவரன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சபரிஹிரிஷன் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதில் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் திருடியது பணிப்பெண் ஜெயலட்சுமி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, ஜெயலட்சுமியைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து நகை, பணத்தைக் கைப்பற்றினர். மேலும் பணிப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேனியிலிருந்து கடத்தி வந்து கோயம்புத்தூரில் விற்பனை: 150 கிலோ கஞ்சா பறிமுதல்!