கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் பழைய சாமான் கடை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே அப்பகுதியினர் இக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடை பூட்டிய நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று பழைய பொருள்கள் சேமிக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருகிலுள்ள வீடுகளில் சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை அணைக்க கூறியதோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மூன்று வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்ததால் அருகிலுள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.