கன்னியாகுமரி: நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 2010ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துணி வியாபாரிகளான வாசிம் என்ற முன்னா மற்றும் சையது அலி ஆகியோர் தங்கியிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் துணி வியாபாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில், இருவருக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த வாசிம், சையது அலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார். இது தொடர்பாக கோட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாசீமை தேடி வந்த நிலையில், சில ஆணடுகளுக்கு பின்பு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
டெல்லியில் ஜாபர்பாத், பாஜல் புரா பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் இருவரை வாசீம் சுட்டுக் கொலை செய்ததாக பதிவான வழக்கில் வாசீம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சையது அலி கொலை வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வாசீம் ஆஜர் ஆகாத நிலையில், கோட்டார் காவல்துறையின் கடும் முயற்சிகளுக்கு இடையே டெல்லி திகார் சிறையில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாசீம் இன்று(ஜூன் 15) நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை இந்த வழக்கின் விசாரணைக்காக நாகர்கோவில் சிறையில் அடைக்குமாறு கோட்டார் காவல்துறையினர் கூடுதல் மாவட்ட நீதிபதிக்கு மனு சமர்ப்பித்தனர். திகார் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் வாசீம் நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 550 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு: கடத்தல் லாரி மீட்பு