கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜன். இவர் ஆயுதப்படை மைதான சாலையில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதைநோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் ராஜனின் கடைக்குள் புகுந்து கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் கோழி கூண்டுகள், அடுக்கு தட்டுகள், நாற்காலி, எடை இயந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்நிலையில் அதிகாலையில் வேலைக்கு வந்த வேலையாட்கள் கடை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சேதமடைந்த கடையை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.