கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜேக்கப். இவர் நாகர்கோவில் புத்தேரியில் அரசு அனுமதி இல்லாமல் கிருபை முதியோர் இல்லம் நடத்தி வருவதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை அதிகாரியால் சோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த காப்பகத்தில் இருந்த முதியோர்கள் 6 பேர் மற்றொரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் ஒருவரான நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த 62 வயதான அபுசாலிகாதர் என்பவரை, அவரது மனைவி மாதம் 20 ஆயிரம் ரூபாய் காப்பகம் நிர்வாகிக்கு ஆன்லைன் மூலம் செலுத்திப் பராமரித்து வந்துள்ளார். காப்பகம் சீல் வைக்கப்பட்ட தகவல் அவருக்கு கொடுக்கப்படாமல் மீண்டும் தொடர்ந்து பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது கணவரை காட்டும்படி பல முறை கிருபை முதியோர் இல்லத்தை அபுசாலிகாதரின் மனைவி வற்புறுத்தியும் அவர்கள் எந்தப் பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால், அபுசாலிகாதரின் மனைவி சமூக நலத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று இளம் பெண் ஒருவர், அபுசாலிகாதர் தனது தாத்தா எனவும், அவரை நாங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறோம் எனவும் கூறி சமூக நலத்துறை அதிகாரிக்கு மனு அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அப்பெண் சமூக நலத்துறை அலுவலகத்திற்குத் தனது ஆவணங்களுடன் வந்த போது, சமூக நலத்துறை அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் அப்பெண் முன்னுக்குப் பின் பேசிய நிலையில், இது குறித்து நேசமணி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், சீல் வைக்கப்பட்ட தனியார் முதியோர் இல்லத்தின் உரிமையாளர், மாதம் 20 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு அபுசாலிகாதரை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்துள்ளார். அதற்காக அந்த இளம் பெண்ணை பயன்படுத்தி நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது.
முதியவரை பணத்திற்காக நூதன முறையில் அழைத்துச்செல்ல முயன்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: குமரி திருவள்ளுவர் சிலையை ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர்