கன்னியாகுமரி: நெல்லை மாவட்டம், லெவிஞ்சிபுரம் சாலை புத்தூரைச் சேர்ந்தவர், ரமேஷ். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதாமதி (வயது 47). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுதாமதி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராம் பகுதியில் இருந்து வழுக்கம்பாறை நோக்கி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அஞ்சு கிராமம் மேற்கு பஜாரிலிருந்து மெயின்ரோட்டுக்கு வந்தபோது மணல் ஏற்றி வந்த டெம்போ அதிவேகமாக வந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதி அருகில் உள்ள கால்வாயில் பாய்ந்துள்ளது.
இதில் சுதாமதி, டெம்போவின் அடிப்பகுதியில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார். மேலும் உடன் பயணித்த அவரது உறவினர் ஆதிலிங்கத்திற்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சுசீந்திரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராம காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுதாமதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு வந்து கால்வாயில் கவிழ்ந்து கிடந்த டெம்போவை மீட்டு வாகனம் மூலம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக டெம்போ டிரைவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: குடிபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது வழக்கு பதிவு - சென்னை போக்குவரத்து காவல்துறை