காரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வசதியாக, செவிலியர் படிப்பு முடித்து வேலைக்காகக் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்காலிக செவிலியர் பணி வழங்கப்பட்டது.
இவ்வாறு கரோனா நோயாளிகளைக் கவனிக்க மாவட்டம் முழுவதும் 120 தற்காலிக செவிலியர் நியமிக்கப்பட்டனர். ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு தற்போது பணி முடிவடைந்துவிட்டதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் இரண்டு மாதங்களாகப் பணிபுரிந்தமைக்காக உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக செவிலியராக பணியாற்றியவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "வருங்காலங்களில் செவிலியர் பணியிடங்களை நிரப்பும்போது தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், இரண்டு மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளனர்.